கரோனா அச்சுறுத்தல்: ஆக்ஸிஜனுக்கு நிதியுதவி வழங்கிய தவான்!
ஐபிஎல் 2021 14ஆவது சீசனில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரராகவும் ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் இவர், கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவின் ஆக்சிஜனுக்காக ரூ.20 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதற்கு முன் நாம் எதிர்கொள்ளாத துயரமான தருணத்தில் இப்போது உள்ளோம். இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. இத்தனை நாள்களாக உங்களது அன்பையும் ஆதரவையும் எனக்கு கொடுத்தீர்கள்.
இப்போது அதனை நான் நாட்டு மக்களுக்காக கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். அதனால் இந்தியாவின் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில் ரூ.20 லட்சம், இனி நடைபெறவுள்ள போட்டிகளில் எனது தனித்திறனால் ஐபிஎல் 2021 சீசனில் எனக்கு கிடைக்கும் பரிசுத்தொகையும் மிஷன் ஆக்சிஜனுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.
முன்களப் பணியாளர்களுக்கு எனது நன்றிகள். உங்களது அயராத பணிக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம். அதே நேரத்தில் அனைவருக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முகக்கவசம் அணியுங்கள். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். ஒன்றுபடுவோம்! வெல்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் தனக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 10 விழுக்காடு கரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்குவதாக ராஜஸ்தான் ராயல் அணியின் பந்துவீச்சாளர் உனத்கட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.