ஹர்சித் ரானா மீது நான் முழு நம்பிக்கை வைத்தேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்ரு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியாது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி ஆண்ட்ரே ரஸல், பில் ஆல்ட் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டமுடியாமல் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கிய கேகேஆர் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “போட்டியின் 17வது ஓவரில் இருந்தே நான் அதிக பதட்டத்துடன் தான் இருந்தேன். கடைசி ஓவரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி இருந்தபோது, கடைசி ஓவரை வீசுவதற்கு எங்களிடம் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை.
ஆனால் ஹர்சித் ரானா மீது நான் முழு நம்பிக்கை வைத்தேன். அவரிடம் நான், என்ன நடந்தாலும் பிரச்சனையில்லை, கவலைப்படாமல் பவுலிங் செய் என்று கூறினேன்.ஹர்சித் ரானாவும் சற்று பதட்டத்துடன் தான் இருந்தார். ஆனால் நான் இது உனக்கான நேரம் இதை சரியாக பயன்படுத்தி கொள் என்று கூறினேன், அவரும் தனது வேலையை சரியாக செய்து கொடுத்துவிட்டார்.
ஆண்ட்ரே ரஸல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானவர்கள். இருவரும் தங்களது பங்களிப்பை இந்த போட்டியில் சரியாக செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டி எங்களுக்கு அதிகமான விசயங்களை கற்று கொடுத்துள்ளது என்பதே உண்மை. பீல்டிங் முன்னேற்றம் தேவை என கருதுகிறேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.