ஐபிஎல் 2025: வார்னரின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி ஷுப்மன் கில் இப்போட்டியில் 38 ரன்களை சேர்த்ததன் மூலம் அஹ்மதாபாத் மைதானத்தில் தன்னுடைய 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே மைதானத்தில் மிக குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் எனும் பேருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக டேவிட் வார்னர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் 22 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் குவித்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் ஷுப்மன் கில் 20 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.
இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வெறும் 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை நிறைவு செய்த முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணியின் ஷான் மார்ஷ் மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் 27 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் குவித்து நான்காம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 38 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் 63 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. மும்பை இதரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 48 ரன்களையும், திலக் வர்மா 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.