கெய்க்வாட்டிற்கு பதில் அபிஷேக்கை தேர்வு செய்த ஷுப்மன் கில்!

Updated: Fri, Jul 05 2024 20:09 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, துருவ் ஜுரெல் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதலிரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் சர்மா உள்ளிட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும், எந்தெந்த அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களமிறங்குவார் என்று கேப்டன் ஷுப்மன் கில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “முதல் டி20 போட்டியில் என்னுடன் அபிஷேக் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவார். அதேசமயம் ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாம் இடத்தில் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார். மேற்கொண்டு பேசிய அவர், “எனது ஐபிஎல் அணிக்கு முதன்முறையாக நான் கேப்டனாக இருந்தபோது, ​​என்னைப் பற்றி நிறைய விஷயங்களையும், தலைமைத்துவக் கண்ணோட்டத்தைப் பற்றி நிறைய விஷயங்களையும் தெரிந்துகொண்டேன். ஒரு கேப்டனாக நீங்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான சவால்கள் மனதளவில் அதிகம் இருப்பதாக நான் உணர்ந்தேன்.

உலகக் கோப்பையில் விளையாடிய அணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அணி இது. அணியில் நான் உட்பட நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அதனால் நான் இத்தொடரில் இடம்பிடித்துள்ள அறிமுக வீரர்களுக்கு சர்வதேச அளவில் விளையாடுவது எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். ஏனெனில் நிறைய வீரர்கள் பல போட்டிகளில் விளையாடவில்லை மற்றும் சில வீரர்கள் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகம் கூட ஆகவில்லை. எனவே, அவர்களுக்கு அதிக சர்வதேச வெளிப்பாடு மற்றும் அனுபவத்தை வழங்குவதே இந்தத் தொடருக்கான எங்கள் நோக்கம் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

முன்னதாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி அணிக்கு தங்கப்பதம் வாங்கிக்கொடுத்த அனுபவம் வாய்ந்த ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருக்கும் பட்சத்தில், அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லிற்கு தலைமை பொறுப்பை வழங்கியுள்ளது பெரும் விவாதமான நிலையில், தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் ஆர்டரையும் ஷுப்மன் கில் மாற்றியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டின் ரசிகர்கள் பலரும் ஷுப்மன் கில்லின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை