ஷுப்மன் கில்லிடம் மிகச்சிறந்த டேலண்ட் இருக்கிறது - முரளி விஜய்!
இந்திய கிரிக்கெட் அணி வருகிற 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லாமல் இருக்கிறது. இம்முறை அந்த வாய்ப்பு கைகூடி வந்திருக்கிறது. இதை நழுவவிடாமல் இருக்க பிசிசிஐ பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
இந்திய அணி வெற்றிபெற, அணியில் சிறந்த ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் பைனலில் முக்கியமான வீரராக இருப்பார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் முதல் கில் வெளிப்படுத்தி வரும் ஆட்டம் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இவர் குவித்து வரும் சதங்கள் இவரின் மீது பெரும் கவனத்தை கொடுத்திருக்கிறது.
மேலும் ஐபிஎல் தொடரிலும் கில் தனது ஃபார்மை தொடர்ந்துள்ளார். ஆகையால் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் அவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். டாப் ஆர்டரில் இந்திய அணிக்கு பெருத்த நம்பிக்கையை கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஷுப்மன் கில் சுதாரிப்பாக இருக்க வேண்டும். அவரிடம் வேகம் இருக்கிறது. அதேபோல் விவேகத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் முரளி விஜய் அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஐந்து ஆறு மாதங்களாக இவரை பற்றிய பேச்சுகள் பெரிதளவில் கிரிக்கெட்டில் அடிபடுகிறது. அவரின் பேட்டிங் டெக்னிக் பலம் சேர்கிறது. அபாரமான ஃபார்மில் இருக்கும் இவருக்கு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான வித்தியாசம் பற்றி புரிதல் வேண்டும். அதற்காக அவருக்கு புரிதல் இல்லையென்று நான் கூறவில்லை. மூன்றுவித கிரிக்கெட்டுகளை விளையாடுவதால், அணுகுமுறை மாற்றம் இருக்கும். ஒரு பார்மட்டின் அணுகுமுறை மற்ற பர்மட்டிலும் நம்மை அறியாமல் வெளிப்படுவது இயல்பு. அது பாதிக்காமல் இருக்க வேண்டும்.
தனது கிரிக்கெட்டை புரிந்து கொண்டு டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் ஒன்றின் அணுகுமுறைகளை மற்றொன்றை பாதிக்காதவாறு வைத்துக்கொள்ள வேண்டும். சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோர்கள் இதற்கு உதவிகரமாக இருப்பார்கள். அவர்களை அணுகலாம். தெளிவான புரிதலுடன் ஆட வேண்டும். நன்றாக வேகம் இருக்கிறது. அதேபோல் வரும் காலங்களில் சற்று விவேகத்துடம் அவர் செயல்பட வேண்டும்.
இந்திய அணியில் இருக்கும் 15 வீரர்களும் சூப்பர் ஸ்டார். இந்திய அணிக்கு ஆடிவிட்டாலே அவர்களது திறமையில் சந்தேகம் இல்லை. ஆனால் சமீப காலமாக இளம் வீரர்களை பார்க்கையில், நான் இரண்டு முக்கியமான வீரர்களை குறிப்பிட வேண்டும். அதில் ஷுப்மன் கில் ஒருவர் மற்றொருவர் ப்ரிதிவி ஷா இருவரிடமும் நல்ல டெக்னிக் மற்றும் அணுகுமுறை இருக்கிறது. எதிர்காலத்தில் உச்சம் பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.