ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில், இஷான் கிஷன் முன்னேற்றம்!

Updated: Wed, Sep 06 2023 21:46 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் இளம் வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தில் தொடருகிறார். இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் லஸ்ஸி வான்டெர் டுசென் தொடருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ஷுப்மான் கில் உள்ளார். நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் கில் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 750 புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 10ஆவது இடத்தில் தொடருகிறார். பல்லேகலேயில் நடந்த பாகிஸ்தானுடனான ஆட்டத்தின் போது கிஷன் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் அடித்தார். இதன்மூலம் தரவரிசையில் 12 இடங்கள் உயர்ந்து தற்போது 24ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடத்திலும், மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடங்களில் தொடருகின்றனர். ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்படும் பல நட்சத்திரங்கள் புதுப்பிக்கப்பட்ட பந்துவீச்சாளர் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முதல் இரண்டு ஆட்டங்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே சமயம் சக வீரர்களான ஹரிஸ் ரவூஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை