அடுத்தடுத்து இரட்டை சதம்; உலக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Updated: Sun, Feb 18 2024 14:11 IST
Image Source: Google

நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைவரது கவனத்தையும் யஷஸ்வி ஜெய்வால் ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

இந்நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். 

இவரது இரட்டை சதத்தின் மூலமாக இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற 557 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இரட்டை சதத்தை பதிவுசெய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், பல்வேறு சதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, இங்கிலாந்து அணிக்கெதிராக ஒரு தொடரில் இரண்டு முறை இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 

இப்போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரண்டு இரட்டை சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமை ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ளது. இந்த பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி 21 வயது 54 நாள்களிலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன் 21 வயது 318 நாள்களிலும் இரண்டு இரட்டை சதங்களை பதிவுசெய்துள்ளனர். அதில் தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 வயது 53 நாள்களில் இரண்டு இரட்டை சதங்களை அடித்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். 

அதேபோல் இப்போட்டியில் 214 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸில் 14 பவுண்டரி, 12 சிக்சர்களை விளாசினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் சாதனையை சமன்செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

மேலும் இத்தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மொத்தமாக 20 சிக்சர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு டெஸ்ட் தொடரில் 19 சிக்சர்களை அடித்ததே சதானையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை