ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சாதித்தார் சமாரி அத்தப்பத்து!

Updated: Tue, Apr 23 2024 20:40 IST
Image Source: Google

இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது. அதிலும் குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் 302 ரன்கள் என்ற கனடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தப்பத்து 195 ரன்களைச் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 195 ரன்களைக் குவித்த சமாரி அத்தப்பத்து முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதேசமயம் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

மேலும் இலங்கைக்கு எதிரான தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட்டும் அடுத்தடுத்து சதங்களை விளாசியதன் மூலம் பேட்டர்கள் தவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் பின் தங்கி 5ஆம் இடத்திற்கும், ஹர்மன்ப்ரீத் கவுர் 9ஆமிடத்திலும் நீடித்து வருகின்றனர். 

 

அதேபோல் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை மரிஸான் கேப் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் 3 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்தின் நாட் கைவர் மூன்றாம் இடத்திற்கும் தளப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 6ஆம் இடத்தில் உள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை