இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடர் முதல் இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரும் செயல்படவுள்ளதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதேசமயம் இலங்கை அணியிலும் வநிந்து ஹசரங்கா கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது தலைமையில் இலங்கை அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனக்கும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் இடையே உள்ள பிணைப்பு குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் பந்தம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை சரியாக 10 வருடங்கள் ஆகின்றன. இடையில் நான் மற்றொரு அணியிலும், அவர் மற்றொரு அணியிலும் சேர்ந்தார்.
ஆனால் நாங்கள் இருவரும் விளையாட்டைப் பற்றி அடிக்கடி பேசுவோம். அவர் வேறொரு அணியுடன் விளையாடும்போது, நான் அவருடன் உரையாடுவது வழக்கம். அந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை அவரிடம் கேட்டறிந்துள்ளேன். நான் அவருடன் பயணிக்காத கடந்த ஆறு வருடங்களிலிருந்து எனது கற்றல் தொடர்கிறது. இந்த பந்தம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது.
நாங்கள் நிறைய பேசினோம், ஆனால் அதிகம் இல்லை. ஆனால் அவருக்கு என் உடல் மொழி தெரியும். அவரது உடல் மொழியைப் பார்க்கும்போது, அவர் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறார், நான் அவரிடம் என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் இல்லை என்று சொன்னால், அவர் என்ன விரும்புகிறார், எனக்கு என்ன வேண்டும் என்று புரிந்துகொள்கிறார். எனவே, இந்த பந்தம் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.