SL vs AUS, 3rd T20I: ஸ்மித் இறுதிநேர அதிரடி; இலங்கைக்கு 177 டார்கெட்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பல்லகலேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்துள்ளது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - ஆரோன் ஃபிஞ்ச் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 29 ரன்கள் எடுத்திருந்த ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, அடுத்து வந்த க்ளென் மேக்ஸ்வெல்லும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் வார்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்.