SL vs BAN, 2nd ODI: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி வீரர் தன்விர் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த பர்வேஸ் ஹொசைன் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பர்வேஸ் ஹொசைன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வேஸ் ஹொசைன் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 9 ரன்களுக்கும், ஷமிம் ஹொசைன் 22 ரன்னிலும், ஜக்கார் அலி 24 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த தாவ்ஹித் ஹிரிடோயும் 51 ரன்களில் ரன் அவுட்டானார். இறுதியில் தன்ஸிம் ஹசன் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணி 45.5 ஓவர்களில் 248 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா 5 ரன்களுக்கும், நிஷன் மதுஷ்கா 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த குசால் மெண்டிஸ் - கமிந்து மெண்டிஸ் இணை ஓரளவு தாக்குபிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் குசால் மெண்டிஸ் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா 6 ரன்னிலும் என ஆட்டமிழக்க, 33 ரன்களைச் சேர்த்த கையோடு கமிந்து மெண்டிஸும் விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜனித் லியானகே ஒருபக்கம் நின்று விளையாட, மறுமுனையில் களமிறங்கிய துனித் வெல்லாலகே, வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷ்னா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். மேற்கொண்டு அரைசதம் கடந்து விளையாடி வாந்த ஜனித் லியானகேவும் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 78 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய துஷ்மந்தா சமீராவும் 13 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன் காரணமாக இலங்கை அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களில் ஆல் அவுட்டானது. 

Also Read: LIVE Cricket Score
Advertisement

வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தன்விர் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தன்விர் இஸ்லாம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News