இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். அதன்படி சிராஜ் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொண்ட பதும் நிஷங்கா விக்கெட்டை இழந்து இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை தடுத்தார். மேற்கொண்டு இருவரும் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாச அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது.
இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களைச் சேர்த்திருந்த குசால் மெண்டிஸும் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா - கேப்டன் சரித் அசலங்கா இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.
பின் 14 ரன்கள் எடுத்த நிலையில் சதீரா சமரவிக்ரமா விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜனித் லியனகே 12 ரன்களுக்கும், கேப்டன் சரித் அசலங்கா 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை 136 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த துனித் வெல்லாலகே - கமிந்து மெண்டிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய துனித் வெல்லாலகே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை கடந்ததுடன் அணியின் ஸ்கோரும் 200 ரன்களை தாண்டியது.
இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துனித் வெல்லாலகே ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை அதிரடி காட்டிய கமிந்து மெண்டிஸ் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, மறுபக்கம் அகிலா தனஞ்செயா 15 ரன்களில் ரன் அவுட்டானார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.