இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றியும், ரிங்கு சிங் ஒரு ரன்னுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும், ஷிவம் தூபே 13 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இந்திய அணி 48 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஷுப்மன் கில் - ரியான் பராக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 6ஆவது விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 37 பந்துகளில் 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரியான் பராக்கும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - ரவி பிஷ்னோய் இணை ஓரளவு போராடி ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 25 ரன்களில் வாஷிங்டன் சுந்தரும் ஆட்டமிழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹீஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்கே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்திருந்த பதும் நிஷங்கா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து குசால் மெண்டிஸுடன் இணைந்த குசால் பெரேராவும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இப்போட்டியில் நிதானமாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வநிந்து ஹசரங்காவும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சரித் அசலங்காவும் முதல் பந்திலேயே வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த குசால் பெரேரா 46 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ரமேஷ் மெண்டிஸும் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் கடைசி ஓவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் கமிந்து மெண்டிஸும், மூன்றாவது பந்தில் மஹீஷ் தீக்ஷனாவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சமிந்து விக்ரமசிங்கே 4 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை சமன்செய்தார். இதன்மூலம் இலங்கை அணியும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்திருந்தது.
இந்திய அணி தரப்பில் அபாரமான பதுவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ரிங்கு சிங் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் இப்போட்டியின் முடிவானது சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொள்ள இலங்கை அணி தரப்பில் குசால் மெண்டிஸ் - குசால் பெரேரா ஆகியோர் களமிறங்க, இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். இதில் குசால் பெரேரா இரண்டாவது பந்தில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய பதும் நிஷங்காவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
இதனால் இலங்கை அணி சூப்பர் ஓவரில் 2 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் - ஷுப்மன் கில் இணை களமிறங்க, இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா சூப்பர் ஓவரை வீசினார். ஓவரின் முதல் பந்தை சூர்யகுமார் யாதவ் பவுண்டரி விளாச, இந்திய அணியின் சூப்பர் ஓவர் முறையில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது.