SL vs NZ, 1st Test: கருனரத்னே, சண்டிமால் அபாரம்; முன்னிலையில் இலங்கை அணி!

Updated: Fri, Sep 20 2024 20:39 IST
Image Source: Google

இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீண்டது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் தனது சதத்தை பதிவுசெய்ய, மறுபக்கம் குசால் மெண்டிஸ் தனது அரைசதததைப் பதிவுசெய்தார்.  இதன்மூலம், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்களையும், குசால் மெண்டீஸ் 50 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் லேதமுடன் இணைந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். பின்னர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டாம் லேதம் 70 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேன் வில்லியம்சனும் 55 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திராவும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டேரில் மிட்செல் 41 ரன்களுடனும், டாம் பிளெண்டல் 18 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பிளெண்டல் 25 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அரைசதம் கடந்த டேரில் மிட்செல்லும் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்களில் கிளென் பிலீப்ஸ் 49 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிக்ஸில் 340 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 35 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த திமுத் கருணரத்னே - தினேஷ் சண்டிமால் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் சதத்தை நெருங்கிய கருணரத்னே 83 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 61 ரன்களில் தினேஷ் சண்டிமாலும் ஆட்டமிழந்தார். பின்னர் கமிந்து மெண்டிஸும் 13 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களைச் சேர்த்தது. இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கேப்டன் தனஞ்செயா டி சில்வா ஆகியோர் தலா 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 202 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை