SL vs PAK 1st Test: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

Updated: Thu, Jul 20 2023 11:34 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16ஆம் தேதி கலேவில் தொடங்கியது. இப்போட்ட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணிமுதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி தனஞ்செய டி சில்வாவின் அபாரமான சதத்தின் மூலமாகவும், மேத்யூஸின் அரைசதம் மூலமாகவும் 312 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், சௌத் சகீல், ஆகா சல்மான் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 461 ரன்களைச் சேர்த்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் இரட்டை சதமடித்ததுடன் 208 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் இரண்டாவது 149 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் தனஞ்செய டி சில்வா, நிஷான் மதுஷங்கா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத், நௌமன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி நேற்று நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 83 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது. 

இதில் பாபர் ஆசாம் 24 ரன்களிலும், சௌத் சகீல் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்திருந்த இமாம் உல் ஹக் இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த சௌத் சகீல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை