இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இன்று பல்லேகல்லேயில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் ஹாசினி பெரேரா 0, விஷ்மி 3 என ரேனுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்து களமிறங்கிய ஹர்ஷித்தா மாதவியும் ரன் ஏதுமின்றி ரேனுகா சிங் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அத்தபத்து 27, அனுஷ்கா சஞ்சீவனி 25, நிலாக்ஷி டி சில்வா 32 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமா காஞ்சனா 47 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, மேகனா சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.