இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 

Advertisement

இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த கேப்டன் அத்தபத்து - ஹர்ஷிதா மாதவி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் அதிரடியாக விளையாடிய அத்தபத்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களிலும், மாதவி 28 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய கவிஷா தில்ஹாரியும் 26 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய ஹாசினி பெரேரா 2, நிலாக்‌ஷி டி சில்வா 12, அமா காஞ்சனா 19 ரன்களை எடுக்க, இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்த்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஃபி ஃபிளெட்சர், ஆலியா அலீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஸ்டேஃபானி டெய்லர் மற்றும் கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

இதில் டெய்லர் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஹெய்லி மேத்யூஸ் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஷெமைன் காபெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய சேடியன் நேஷன் 9 ரன்களிலும், ஆலியா அலீன் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த காம்பெல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 41  ரன்களைச் சேர்த்திருந்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News