சையித் முஷ்டாக் அலி: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது மும்பை!
சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜித்தேஷ் சர்மா 46, வான்கடே 34 ரன்களையும் சேர்த்தார். மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் விதர்பா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது.
இதை தொடர்ந்து, 165 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா அதிரடி தொடக்கம் கொடுத்தார். அவர் 21 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில் மும்பை அணி 16.5 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 169 ரன்கள் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாளை மறுநாள் நடக்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதி போட்டியில் இமாச்சல பிரதேசம்- மும்பை அணிகள் மோதுகின்றன.