மிதாலி ராஜ், சூஸி பேட்ஸ் சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நவி மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்களைக் குவித்தது. இதில் ஸ்மிருதி மந்தனா 77 ரன்னும், ரிச்சா கோஷ் 54 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39 ரன்னும், ராகவி பிஸ்ட் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து களமிறங்கியது. அந்த அணியின் சின்னெலே ஹென்றி 16 பந்தில் 43 ரன்கள் குவித்ததை தவிர்த்து மற்ற வீராங்களை சோபிக்க தவறினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் இந்த டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் ஆட்டநாயகி விருதையும், இத்தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் கடந்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஸ்மிருதி மந்தனா மகளிர் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி மந்தனா இப்போட்டியில் 77 ரன்கள் எடுத்ததன் மூலம் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார்.இப்போது இருதரப்பு டி20 தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
முன்னதாக கடந்த 2018ஆம் அண்டு தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடிய மிதாலி ராஜ் மொத்த்மாக 192 ரன்களை எடுத்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், தசமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஸ்மிருதி மந்தனா 193 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை
- ஸ்மிருதி மந்தனா – 193 vs வெஸ்ட் இண்டீஸ் (2024)
- மிதாலி ராஜ் – 192 vs தென் ஆப்பிரிக்கா (2018)
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் – 191 vs இலங்கை (2018)
- ஸ்மிருதி மந்தனா – 180 vs நியூசிலாந்து (2019)
- ஹர்மன்ப்ரீத் கவுர் – 171 vs வெஸ்ட் இண்டீஸ் (2016)
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து ஸ்மிருதி மந்தனா இந்த் டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்தார். இதன்மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக 50+ ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையையும் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். முன்னதாக நியூசிலாந்தின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சுசி பேட்ஸின் 171 போட்டிகளில் 29 முறை 50+ ஸ்கோரை அடித்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ஸ்மிருதி மந்தனா இதுவரை 148 டி20 போட்டிகளில் விளையாடி 30 முறை 50+ ஸ்கோர் எடுத்து சாதனை படைத்துள்ளார்.