INDW vs IREW: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
இந்திய மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் வெற்றிகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி இத்தொடரை எதிர்கொள்கிறது.
மேலும் இந்த அணியில் வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக ஸ்மிருதி மந்தனா அணியை தலைமை தாங்குகிறார். இதனால் அவரது தலைமையில் இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை பூர்த்தி செய்வார்.
இதுவரை இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனா 94 ஒருநாள் போட்டிகளில் 94 இன்னிங்ஸ்களில் விளையாடி 3960 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர், 9 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களை பதிவுசெய்துள்ளார். இதுதவிர்த்து இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் இந்திய அணிக்காக இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையையும் ஸ்மிருதி மந்தனா படைக்கவுள்ளார்.
இதுவரை இந்தியா சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் மட்டுமே 4000 ரன்களை கடந்து இந்த சாதனையை எட்டியுள்ளார். அவர் 232 போட்டிகளில் 211 இன்னிங்ஸ்களில் 7,805 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை எட்டியதன் அடிப்படையில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்தையும் பிடிக்கவுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பிளெண்டா கிளார்க் 86 இன்னிங்ஸ்களிலும், மெக் லானிங் 89 இன்னிங்ஸ்களிலும் 4000 ரன்களைக் கடந்து இந்த பட்டியலின் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். அதேசமயம் மிதாலி ராஜ் 112 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஸ்மிருதி மந்தனா சிறந்த ஃபார்மில் இருந்தார். மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த உலக சாதனையை அவர் படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.