தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, இந்திய மகளிர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான இந்திய மகளிர் அணியில் அறிமுக வீராங்கனையாக அருந்ததி ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தயாளன் ஹெமலதாவும் 24 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா விளாசும் 7ஆவது சதம் இதுவாகும்.இதன்மூலம் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையையும் சமன்செய்து அசத்தியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 232 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஸ்மிருதி மந்தனா சமன்செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.