இந்தியா மகளிர் - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா  இணை ஆதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் தங்கள் முதல் சதங்களையும் பதிவு செய்து அசத்தினர். 

Advertisement

மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின், 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 109 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை இழக்க, அவரைட் தொடர்ந்து 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 122 ரன்களில் பிரதிகா ராவலும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜேமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 பவுண்டரிகளுடன் 76 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ரோஸ்மரி மையர், அமெலிய கெர் மற்றும் சூஸி பேட்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் சூஸி பேட்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஜார்ஜியா பிளிம்மர் - அமெலியா கெர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஜார்ஜியா பிளிம்மர் 30 ரன்களுக்கும், அமெலியா கெர் 45 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சோஃபி டிவைனும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ப்ரூக் ஹாலிடே - இஸபெல்லா கஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் தங்களின் அரைசதங்களையும் பூர்த்தி செய்தனர். இதில் ப்ரூக் ஹாலிடே 81 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஸபெல்லா கஸ் 65 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங், கிராந்தி கௌட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்ததுடன், நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் சதம் விளாசிய இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News