இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சவுரவ் கங்குலி! 

Updated: Sat, Jul 08 2023 20:31 IST
Sourav Ganguly picks his four semi-finalists for the ODI World Cup 2023! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில்  தொடங்க உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வலுவான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துவதற்கு போராட உள்ளது.

இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் விளையாட உள்ளன. அந்த வகையில் இத்தொடரின் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை முத்தமிடுவதற்கான வாய்ப்பை கொடுக்கும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற போகும் 4 அணிகள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதில் கடந்த 10 வருடங்களாக கோப்பையை வெல்லாவிட்டாலும் பெரும்பாலும் நாக் அவுட் சுற்றை எட்டி வரும் இந்தியா இம்முறையும் சொந்த மண்ணில் குறைந்தபட்சம் அரையிறுதி போட்டிகளில் விளையாடும் ஒரு அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல 5 கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா கடந்த பிப்ரவரியில் இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்தது போல இத்தொடரிலும் நாக் அவுட் சுற்றை நெருங்கும் என்று நம்பப்படுகிறது. 

மேலும் அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடும் இங்கிலாந்து எப்போதுமே ஐசிசி தொடர்களில் இந்தியாவை தோற்கடித்து வரும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளை குறைத்து மதிப்பட முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சவுரவ் கங்குலி, “அதை சரியாக சொல்வது மிகவும் கடினமாகும். இருப்பினும் அந்த அணிகள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவாக இருக்கும். அதே சமயம் அழுத்தமான பெரிய போட்டிகளில் நீங்கள் நியூசிலாந்தை குறைத்து மதிப்பிட முடியாது. எனவே அரையிறுதியில் விளையாடுபவர்களின் பட்டியலில் பாகிஸ்தானையும் சேர்த்து நான் 5 அணிகளை தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் பாகிஸ்தானிடமும் நல்ல தரம் இருக்கிறது. அதனால் ஒருவேளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் எங்கள் ஊரில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் செமி ஃபைனலில் விளையாடினால் அதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும்.

பொதுவாக ஐசிசி தொடர்களில் அழுத்தம் இல்லாமல் இருக்காது. அது போன்ற நிலையில் கடந்த உலக கோப்பையில் ரோகித் சர்மா 5 சதங்கள் அடித்தார். இருப்பினும் அவர் மீதும் இம்முறை அழுத்தம் இருக்கும் என்று நான் உறுதியாக சொல்வேன். எனவே நீங்கள் சிறப்பாக செயல்படும் போது அழுத்தம் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது. அதனால் அழுத்தத்தை தாண்டி சிறப்பாக செயல்படும் வழியை அவர்கள் கண்டறிவார்கள் என்று நம்புகிறேன்.  மேலும் அழுத்தம் நிறைந்த காலங்களில் சிறப்பாக விளையாட வேண்டிய நிலைமையில் ராகுல் டிராவிட் இருந்தார். 

அதே போல தற்போது அவர் பயிற்சியாளராக அழுத்தத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளார். சமீபத்திய காலங்களில் நாம் முக்கிய நேரங்களில் சிறப்பாக செயல்படவில்லை. அதற்கு மனதளவிலான அழுத்தம் காரணமில்லை மாறாக உங்களுடைய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவில்லை என்று நான் கருதுகிறேன். எனவே நமது அணியில் மனதளவில் வலுவாக உள்ளவர்கள் இம்முறை வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை