ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியானது முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் லாரா வோல்வார்ட் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய அன்னேக் போஷ் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மரிஸான் கேப் 14 ரன்களுக்கும், அதிரடியாக விளையாட முயன்ற சுனே லூஸ் 27 ரன்களையும் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தஸ்மின் பிரிட்ஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்களையும், சோலே ட்ரையான் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சதிய இக்பால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டார் ஆர்டர் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்படி குல் ஃபெரோசா ரன்கள் ஏதுமின்றியும், முனீபா அலி 6 ரன்களிலும், சித்ரா அமீன் 4 ரன்களிலும், நிதா தார் 16 ரன்களிலும், சதாஃப் ஷமாஸ் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த அலியா ரியாஸ் - கேப்டன் ஃபாதிமான் சனா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய அலியா ரியாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 52 ரன்களையும், அவருடன் விளையாடிய கேப்டன் ஃபாதிமா சனா 37 ரன்களையும் சேர்த்தனர். 

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் மகளிர் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மரிஸான் கேப், துமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்த தஸ்மின் பிரிட்ஸ் ஆட்டநாயகி விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News