முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் - ரியான் பராகிற்கு பதிலடி கொடுத்த ஸ்ரீசாந்த்!

Updated: Tue, Jul 02 2024 22:36 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ரியான் பராக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அதன்பின் அவர் அளித்த பேட்டி ஒன்றில்,  தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என்று பராக் தெரிவித்திருந்தார். அத்துடன் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அதைப்பற்றி கவலைப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.  இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பிடித்துள்ள அவர் முதலில் நாட்டுப்பற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த், “தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என்று சில இளம் வீரர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன். அதன் பின்பே நீங்கள் கிரிக்கெட்டின் ரசிகனாக இருக்க வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டுக்காக தேர்வாகியுள்ள வீரர்களுக்காக நீங்கள் முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்தின் இந்த கருத்தானது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை