மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் திலாரா அக்தர் 6 ரன்களுக்கும், இஷ்மா தன்ஜிம் ரன்கள் ஏதுமின்றியும், ருபியா ஹைதர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய ரிது மோனி 3 ரன்களிலும், ஷொரிஃபா கதும் 5 ரன்களுக்கும், ரபேயா கான் 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷொர்னா அக்தர் அதிரடியாக விளையாடி 25 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிகர் சுல்தானா 48 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் பிரபோதானி, பிரியதர்ஷினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குணரத்னே மற்றும் கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமாரி அத்தபத்து 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் விஷ்மியுடன் இனைந்த ஹர்ஷிதா சமரவிக்ரமாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமாக விளையாடிய விஷ்மி குணரத்னே தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்ஷிதா சமரவிக்ரமாவும் 33 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கவிஷா தில்ஹாரி 12 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி நடப்பு மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News