SL vs AFG, Only Test: ஆஃப்கானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!

Updated: Mon, Feb 05 2024 15:07 IST
SL vs AFG, Only Test:  ஆஃப்கானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்படி கடந்த 02ஆம் தேதி கொழும்புவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 198 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 91 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமல் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 439 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 141 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 107 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கான் அணி தரப்பில் நவீத் ஸத்ரான 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் 237 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - நூர் அலி ஸத்ரான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் நூர் அலி ஸத்ரான் 47 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அரைசதம் கடந்த ரஹ்மத் ஷா 54 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் சதமடித்து அசத்தியதுடன் 114 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 296 ரன்களை சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனால் இலங்கை அணிக்கு 56 ரன்கள் என்ற இலக்கை ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே 32, நிஷான் மதுஷ்கா 22 ரன்களையும் சேர்த்து 7.2 ஓவர்களில் இலக்கை எட்டினர். இதன்மூலம் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த பிரபாத் ஜெயசூர்யா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை