டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வநிந்து ஹசரங்கா!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
அதன்படி இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. இதில் சதீரா 51 ரன்களையும், மேத்யூஸ் 42 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை துரத்திய ஆஃப்கான் அணியால் இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதன்படி இப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய வநிந்து ஹசரங்கா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன்மூலம் இலங்கை அணி தரப்பில் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவிற்கு பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்த இலங்கை வீரர் எனும் சாதனையை ஹசரங்கா படைத்துள்ளார். அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார்.
இதற்கு முன் ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். அந்த பட்டியளில் தற்போது இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா 63 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச டி10 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
- ரஷித் கான் - 53 போட்டிகள்
- வனிந்து ஹசரங்க - 63 போட்டிகள்
- மார்க் அதிர் - 72 போட்டிகள்
- லசித் மலிங்கா - 76 போட்டிகள்
- இஷ் சோதி - 78 போட்டிகள்