சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் சாதனை!

Updated: Thu, Jan 25 2024 22:15 IST
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் சாதனை! (Image Source: Google)

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய விண்டிஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கவேம் ஹாட்ஜ் - ஜோசுவா டா சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 71 ரன்களுக்கு கவேம் ஹாட்ஜும், 79 ரன்களுக்கு ஜோசுவா டா சில்வாவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களைச் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெவின் சின்க்ளேர் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இன்றையப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய 5ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் ஷேன் வார்னே, கிளன் மெக்ராத், நாதன் லயன் மற்றும் டிகே லில்லி ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்டுகள் வீழ்த்திய 27-வது வீரர் மிட்செல் ஸ்டார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை