இந்திய அணி நிர்வாகத்தின் கவனிப்பை போன்று வேறு எங்கும் இருப்பதில்லை - ஸ்டீவ் ஸ்மித்!

Updated: Mon, Mar 13 2023 21:55 IST
Steve Smith On How Delhi And Ahmedabad Tests Were Different (Image Source: Google)

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் முடிவுற்றிருக்கிறது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடர்ந்து நான்காவது முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில், நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்ததாக இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றது.

நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அடித்தது. அதனை பின்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு சுப்மன் கில்(128) மற்றும் விராட் கோலி(186) இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்ததால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 571 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் மூன்று நாட்களுக்கு உள்ளேயே முடிந்துவிட்டது. நான்காவது டெஸ்ட் போட்டி ஐந்தாம் நாள் ஆட்டம் வரை சென்றது.

91 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, நிதானமாக இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டது. 175 ரன்கள் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைய சுமார் 15 ஓவர்கள் மீதம் இருக்கும் முன்னரே போட்டியைமுடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் சமாதானத்திற்கு வந்தனர். ஆகையால் இப்போட்டி டிராவில் முடிவடைந்தது. தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது.

போட்டி முடிந்த பிறகு, டெஸ்ட் தொடரின் தோல்விக்கான காரணங்கள் பற்றி பேசிய ஸ்டீவ் ஸ்மித், “இந்தியாவிற்கு வந்து விளையாடுவது எப்போதும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதேநேரம் கடும் போட்டியாகவும் இருக்கும். இந்த டெஸ்ட் தொடரில் டெல்லி மைதானத்தில் அந்த ஒரு மணி நேரத்தில் நடந்த மாற்றங்கள் தான் மிகப்பெரிய பின்னடைவை தந்தது. மீதமுள்ள அனைத்திலும் நாங்கள் அபாரமாகவே செயல்பட்டோம்.

தொடர் முழுவதும் நாதன் லையன் செயல்பட்ட விதம் எப்போதும் போல உச்சத்தில் இருந்தது. அதேபோல் புதிதாக உள்ளே வந்திருக்கும் டாட் மார்பி மற்றும் குன்னமென் இருவரும் அபாரமாக செயல்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் முக்கிய பங்காற்றினர். இந்திய அணி நிர்வாகத்தின் கவனிப்பை போன்று வேறு எங்கும் இருப்பதில்லை. தொடர் முழுவதும் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டனர். எனக்கு மிகவும் வயதாகி விட்டது என நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாட முடியுமா? என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை