அபாரமான கேட்ச் பிடித்து புஜாராவை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தற்பொழுது நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று பலமான முன்னிலையைப் பெற்று இருக்க நேற்று இந்தூரில் மூன்றாவது போட்டி ஆரம்பித்தது
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி சுழற்பந்துவீச்சிக்கு எக்கச்சக்கமாக உதவி செய்யும் ஆடுகளத்தில் அவசரப்பட்டு விளையாடி 109 ரண்களுக்கு ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி உஸ்மான் கவஜாவின் சிறப்பான அரை சதத்தால் ஆடுவதற்கு சிரமமான ஆடுகளத்தில் 197 ரன்கள் சேர்த்து 88 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா அணி மீண்டும் சரிவுக்கு உள்ளானது. புஜாரா மட்டுமே நிலைத்து நின்று 59 ரன்கள் எடுத்து நாதன் லயன் பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித் இடம் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
நாதன் லயன் மிடில் ஸ்டெம்பில் இருந்து லெக் ஸ்டெம்ப் புறமாக பந்தை திருப்பி வீச, அதை புஜாரா பிளிக் செய்ய, பந்து வேகமாக பின்புறமாய் காற்றில் செல்ல, சில நொடி அவகாசம் கூட இல்லாத நிலையில், தனது இடது கையை நீட்டி அபாரமாக கேட்ச் செய்தார் ஸ்மித். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் போராட்டமான இலக்கை துரத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
தற்பொழுது இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக 76 ரன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுழற் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கும் ஆடுகளம் என்றாலும் இந்த ரன்னை வைத்துக் கொண்டு வெல்வது என்பது இந்திய அணிக்கு கடினம்தான்.