PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது உறுதி!

Updated: Sun, Oct 13 2024 22:36 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த 11ஆம் தேதி முடிவடைந்தது.

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் கடந்த நிலையில், இங்கிலாந்து அணி ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 800 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன், தோல்வியையும் தழுவியது. இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.

அதேசமயம் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பாபர் ஆசாம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, சர்ஃப்ராஸ் அஹ்மத் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் மறுபக்கம் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக காயம் காரணமாக இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகினார். இதனால் ஒல்லி போப் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். இந்நிலையில் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து மீண்டு தற்போது கம்பேக் கொடுக்கவுள்ளார். 

இதனால் இங்கிலாந்து அணி கூடுதல் வலிமையுடன் இப்போட்டியில் விளையாடும் என்று கணிக்கப்படுகிறது. ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பும் பட்சத்தில், அவருக்கு எந்த வீரர் வழிவிடுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஏனெனில் ஒல்லி போப் கடந்த சில போட்டிகளாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம் பென் டக்கெட்டும் முதல் போட்டியின் போது காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ரெஹான் அஹ்மத், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் காக்ஸ், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜேக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் டெஸ்ட் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல் (துணை கேப்டன்), அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், ஹசீபுல்லா (விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், மெஹ்ரான் மும்தாஜ், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), நோமன் அலி, சைம் அயூப், சஜித் கான், சல்மான் அலி ஆகா, ஜாஹித் மெஹ்மூத்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை