இந்த வீரர் விராட் கோலியைப் போல் வருவார் - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Mon, Dec 12 2022 22:05 IST
Stokes: 'Phenomenal' Brook can enjoy all-format success like Kohli (Image Source: Google)

இங்கிலாந்து அணி 17 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு டெஸ்ட் விளையாட சென்றுள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி, பாகிஸ்தானை தோற்கடித்து. டி20 போட்டியில் விளையாடுவது போல், டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி, 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து அணியின் இந்த வெற்றிக்கு, அந்த அணியின் ஹாரி ப்ரூக்ஸ் முக்கிய காரணமாக திகழ்ந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஒரு பக்கம் நங்கீரம் ஊன்றி நின்ற ஹாரி ப்ரூக்ஸ், அதிரடியாக விளையாடி 149 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார். இவரின் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 355 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.

இதன் பின்னர் வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “வித்தியாசமான சூழலில், மிகவும் வித்தியாசமாக விளையாடிய ஆட்டம் இது. இந்த இரு ஆட்டங்களிலும் முக்கிய அங்கமாக இருந்ததே அற்புதமான உணர்வுகளை அளிக்கிறது. எங்களின் வெற்றிக்காக விக்கெட்டுகள் தேவைப்பட்ட போது, பிட்சில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச எளிதாக இருந்தது. ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகியோரோடு, சுழற்பந்துவீச்சாளர்களும் சரியாக பந்துவீசுகின்றனர்.

அதேபோல் பாகிஸ்தான் அணியின் அப்ராருக்கு சிறந்த அறிமுக போட்டியாக இருந்தது. அவர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இருப்பினும் அவருக்கு எதிராக எங்களால் ரன்கள் சேர்க்க முடிந்தது. அதேபோல் இங்கிலாந்து அணியில் ப்ரூக்ஸ் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரின் பேட்டிங் டெக்னிக், அனைத்து வகையான கிரிக்கெட்டுக்கும் பொருந்தும்.

கிட்டத்தட்ட விராட் கோலியை போன்று மிகவும் எளிய டெக்னிக். அந்த எளிய டெக்னிக் தான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் பொருந்திப் போகும். அதேபோல் பிரஷர் சூழல்களில், எதிரணிக்கு பிரஷரை கடத்துவதில் ப்ரூக்ஸ் வல்லவர். இந்த போட்டியில் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க அவரின் சதம் மட்டுமே காரணம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை