ரோஹித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்தேன் - சுனில் கவாஸ்கர்!

Updated: Mon, Jul 10 2023 11:35 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணி நிறைய விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்திக்க ரோஹித் மற்றும் விராட் ஆகியோரும் காரணமாக அமைந்த நிலையில் அனைத்து பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்ட தேர்வுக்குழுவை விமர்சித்த சுனில் கவாஸ்கர் ரஞ்சி கோப்பையில் அசத்தும் சர்பராஸ் கானை தேர்ந்தெடுக்காமல் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அதே போல வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரை துணை கேப்டனாக அறிவிக்காமல் ரஹானேவை நியமித்ததும் சௌரவ் கங்குலி போன்ற முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னதாக 2014இல் 7ஆவது இடத்தில் தவித்த இந்தியாவை 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இருப்பினும் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வெற்றிகளை பெற்ற அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்தார். அதை விட பொறுப்பேற்றது முதல் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத அவர் முதல் முறையாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழி நடத்தினார்.

ஆனால் அதில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் முதலில் பேட்டிங் செய்யாமல் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்ட அவர் சுமாராக கேப்டன்ஷிப் செய்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்குவது போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா நிறுத்துவார் என்று எதிர்பார்த்ததாக சுனில் கவாஸ்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்த்தேன். கேப்டனின் செயல்பாடுகள் திட்டங்கள் சிறப்பாக இல்லை என்றால் வெளிநாடுகளில் அது குறித்து அந்தந்த வாரியங்களால் கேள்வி கேட்கப்படும். ஆனால் இந்தியாவில்தான் அது வித்தியாசமாக இருக்கிறது. டி20 உலக கோப்பையில் கூட சிறந்த ஐபிஎல் பிளேயர்களை கொண்ட அணியை வைத்துக்கொண்டு, அவர் இறுதிப் போட்டிக்கு கூட வராமல் போனது மிகவும் ஏமாற்றம் அடைய வைத்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பற்றி பிசிசிஐ இவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். அஸ்வினை விட்டு இவர்கள் வந்ததற்காக மேகமூட்டமாக இருந்ததை காரணம் கூறினார்கள். ஆனால் ஹெட்டுக்கு பவுன்சர் பலவீனம் இருந்தது அதை ஏன் பயன்படுத்தவில்லை. கமென்ட்ரி பாக்சில் இருந்து ரிக்கி பாண்டிங் முதல் கொண்டு நாங்கள் இதை சொல்லிக் கொண்டே இருந்தோம். 

ஆனால் இவர்கள் ஹெட் என்பதன் எடுத்த பிறகு பவுன்சர் வீசினார்கள். ஏன் இவர்களுக்கு இது கூட தெரியாதா? சிறந்த பிட்டாக இருக்கும் அணியாக சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால் முந்தைய தலைமுறை வீரர்களை விட களத்தில் சீக்கிரம் உடைந்து போகிறீர்கள். உங்களால் 20 ஓவர் போட்டிகள் விளையாடி கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்த வடிவத்தில் கூட உங்களுக்கு பணிச்சுமை இருப்பதாக சொன்னால் எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை