எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ்!

Updated: Sat, Jan 18 2025 08:53 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஈஸ்டர்ன் கேப் அணியில் தொடக்க வீரர் டேவிட் பெட்டிங்ஹாம் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸாக் கிரௌலி மற்றும் டாம் அபெல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸாக் கிரௌலி 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் டாம் அபெல் அரைசதம் கடந்து அசத்தினார். 

பின்னர் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களை எடுத்திருந்த டாம் அபெலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், ஜோர்டன் ஹார்மன் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சென் 36 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரிட்ஸ்கீ - பிரைஸ் பெர்சன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரைஸ் பெர்சஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சனும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடகக வீரர் மேத்யூ பிரிட்ஸ்கீ 21 ரன்களிலும், குயின்டன் டி காக் 21 ரன்களுக்கும், ஹென்ரிச் கிளாசென் ஒரு ரன்னிலும், வியான் முல்டர் 22 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர்.

Also Read: Funding To Save Test Cricket

இதனால் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஈஸ்டர்ன் கேப் தரப்பில் ரிச்சர்ட் கிளீசன், ஓட்னியல் பார்ட்மேன் மற்றும் லியாம் டௌசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை