சூர்யகுமார் யாதவுக்கு புகழாரம் சூட்டிய சுரேஷ் ரெய்னா!

Updated: Thu, Jan 26 2023 11:50 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது அதிகப்பேரால் பாராட்டப்பட்டு வரும் பெயர் சூர்யகுமார் யாதவ் தான். 2022ஆம் ஆண்டில் அவர் காட்டிய அதிரடியால், ஐசிசி-யின் சிறந்த வீரர் என்ற விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மட்டும் 31 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 1164 ரன்களை விளாசினார். இதில் 2 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களும் அடங்கும். கிட்டத்தட்ட 190 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வரும் சூர்யகுமாரை, இந்தியாவின் ஏபிடி என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

டி20 கிரிக்கெட்டில் கலக்கி வந்த சூர்யகுமார் அடுத்ததாக மற்ற வடிவ கிரிக்கெட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார். நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுவதுமாக அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதனையடுத்து அடுத்ததாக வரவுள்ள ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரிலும் சூர்யகுமாருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அவரின் முதல் டெஸ்ட் தொடராகும்.

இந்நிலையில் இதுகுறித்து சுரேஷ் ரெய்னா புகழ்ந்துள்ளார். அதில், “சூர்யகுமார் விளையாடும் விதத்தை பார்த்தால் 3 வடிவ போட்டியிலும் அவர் தொடர்ச்சியாக ஆட வேண்டும் என நினைக்கிறேன். அவர் இல்லாமல் 3 வடிவ அணியுமே முழுமை பெறாது. வித்தியாசமான ஷாட்களை ஆடுவது முக்கியமல்ல, அதற்காக எந்த அளவிற்கு திட்டம் போடுகிறார் என்பதே முக்கியது. அது சூர்யகுமாரிடம் உள்ளது.

மைதானத்தின் வடிவத்திற்கு ஏற்ப ஷாட்களை தேர்வு செய்யும் திறமை சூர்யகுமாருக்கு இருக்கிறது. அவர் மும்பை வீரர் என்பதால் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து நன்கே அறிந்திருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் ஆடுவதன் மூலம் மற்றொரு சூர்யகுமாரை நாம் பார்க்கலாம். முதலில் சதங்களும், அதன்பின்னர் இரட்டை சதங்களையும் நான் எதிர்பார்க்கலாம்” என ரெய்னா கூறியுள்ளார்.

நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப்பெற்று வருவதால் இந்தாண்டு முழுவதும் அணிக்கு திரும்ப மாட்டார் எனத்தெரிகிறது. அவரின் இடத்திற்கு தான் சூர்யகுமார் கொண்டு வரப்படுகிறார். எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டால் நிச்சயம் நிரந்தர இடம் பிடித்துவிடலாம் என வல்லுநர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை