T20 WC 2024: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

Updated: Fri, Jun 21 2024 12:13 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் அடித்தனர்.

ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.  அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாகவே அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 26 ரன்களையும், நஜிபுல்ல ஸத்ரான் 19 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்த இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார். 

அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை சமன்செய்து சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக விராட் கோலி 120 போட்டிகளில் விளையாடி 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 64 போட்டிகளில் 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்று அச்சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள்

  • 15 -சூர்யகுமார் யாதவ் (64 போட்டிகள்)
  • 15 -விராட் கோலி (120 போட்டிகள்)
  • 14 -விரந்தீப் சிங் (78 போட்டிகள்)
  • 14 -சிக்கந்தர் ராஸா (86 போட்டிகள்)
  • 14 -முகமது நபி (126 போட்டிகள்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை