விராட் கோலி, ரோஹித் சர்மா குறித்து சபார் கரீமின் ட்வீட்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்பொழுது மிகவும் பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது. இப்போதைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் 16 புள்ளிகள் உடன் பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆப் வாய்ப்பில் மிக நெருக்கத்தில் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் பிளே ஆப் வாய்ப்புக்கான போட்டிகளில் தற்பொழுது மோதி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடரில் இது தற்பொழுது மிகவும் முக்கியமான கட்டம்.
மேலும் இந்த ஐபிஎல் தொடரில் இந்திய இளம் வீரர்கள் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா, கொல்கத்தா அணியின் ஃபினிஷர் ரிங்கு சிங், மும்பை அணியின் மிடில் ஆர்டர் மற்றும் மூத்த வீரர் சூரியகுமார் ஆகியோரது பேட்டிங் ஃபார்ம் உச்சத்தில் இருக்கிறது.
ஜெய்ஸ்வால் 12 போட்டிகளில் ஒரு சதத்துடன் 574 ரன்களை 52 ஆவரேஜில் 167 ஸ்ட்ரைக்ரேட்டிலும், திலக் வர்மா ஒன்பது போட்டிகளில் 274 ரன்களை 45 ஆவரேஜிலும், 158 ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்திருக்கிறார்கள். அடுத்து ரிங்கு சிங் 12 போட்டிகளில் 353 ரன்களை 50 அவரேஜிலும் 146 ஸ்ட்ரைக் ரேட்டிலும், சூரியகுமார் யாதவ் 11 ஆட்டங்களில் 376 ரன்களை 34 ஆவரேஜிலும் 186 ஸ்ட்ரைக்ரேட்டிலும் எடுத்திருக்கிறார்கள்.
இளம் வீரர்கள் இந்த அளவில் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்க, இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலியின் ரோகித் சர்மாவும் எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை. விராட் கோலி 11 போட்டிகளில் 420 ரன்கள் எடுத்திருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 133 தான் இருக்கிறது. பேட்டிங் செய்ய சாதகமான பெங்களூர் ஆடுகளத்தில் இந்த ஸ்ட்ரைக் ரேட் குறைவானது. இன்னொரு புறத்தில் விராட் கோலியை குறை சொல்ல முடியாத அளவுக்கு ரோஹித் சர்மாவின் செயல்பாடு மிக மிக மோசமாக இருக்கிறது. அவர் 11 போட்டிகளில் 194 ரன்கள்தான் எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் வெறும் 124 தான்.
தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் டிவிட்டரில், “சூரியகுமார் மற்றும் ஜெய்ஸ்வால் பேட்டிங்கை பார்க்கும் பொழுது, டி20 கிரிக்கெட் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் இருந்து நகர்ந்துவிட்டது என்று தெரிகிறது” என்று கூறியிருக்கிறார். தற்பொழுது அவரது கருத்து சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்களால் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.