டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று முதல் சூப்பர் 12 லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 40 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - கிளென் மேக்ஸ்வெல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதைத்தொடர்ந்து 18 ரன்களில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித்தும் 35 ரன்களில் விக்கெட்டை இழந்ததால், போட்டியில் அனல் பறந்தது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் - மேத்யூ வேட் இணை பவுண்டரி அடிக்கமுடியால் திணறியது. இதனால் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
ஆனால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.