ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் வின்செண்ட் மைதானத்தில்ந் நடைபெற இருந்த இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய நிலையில், மறுபக்கம் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒரு ரன்னிலும் அவரைத்தொர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் தன்ஸித் ஹசனுடன் இணைந்த அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசனும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த தன்ஸித் ஹசன் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோயும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாகிப் அல் ஹசன் தனது 14ஆவது சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மாறுபக்கம் அவருடன் இணைந்து அதிரடி காட்டி வந்த மஹ்முதுல்லா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஷாகிப் அல் ஹசன் 9 பவுண்டரிகளுடன் 64 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்துள்ளது. நெதர்லாந்து அணி தரப்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வான் மீகெரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டிம் பிரிங்கிள் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடவுள்ளது. 

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News