T20 WC 2024: அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Jun 12 2024 21:44 IST
T20 WC 2024: அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் லீன் சூற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஷயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே ஜஹாங்கீரின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்து அசத்தினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரிஸ் கௌஸும் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முதல் ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழக்க அமெரிக்க அணி 3 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டெய்லருடன் இணைந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுக்கு முயற்சியில் இறங்கினார். 

அதன்பின் ஒரு சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆரோன் ஜோன்ஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த நிதீஷ் குமார் மற்றும் கோரி ஆண்டர்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கோரி ஆண்டர்சனும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் ஷால்க்விக் - ஜஸ்தீப் சிங் இணையும் சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான ஃபினிஷ்ங்கைக் கொடுத்தனர். இதன் மூலம் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 110 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷால்க்விக் 11 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 111 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை