T20 WC 2024: நேபாளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்!

Updated: Mon, Jun 17 2024 08:35 IST
T20 WC 2024: நேபாளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேச மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நேபாள் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. அதேசமயம் வங்கதேச அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இந்த வெற்றியானது மிகவும் முக்கியம் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொண்டது. 

செயின்ட் வின்செண்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 4 ரன்களுடன் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

ஆனால் தாவ்ஹித் ஹிரிடோய் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லாவும் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதுவரை தாக்குப்பிடித்து விளையாடி வந்த ஷாகிப் அல் ஹசனும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜகார் அலி 12 ரன்களையும், ரிஷாத் ஹொசைன் 13 ரன்களையும், தஸ்கின் அஹ்மத் 12 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக வங்கதேச அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

நேபாள் அணி தரப்பில் சோம்பால் கமி, தீபேந்திர சிங் ஐரி, கேப்டன் ரோஹித் பௌடல், சந்தீப் லமீச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணிக்கும் சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் குஷால் புர்டெல் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அனில் ஷா, கேப்டன் ரோஹித் பௌடல், சந்தீப் ஜோரா என டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் மற்றொரு தொடக்க வீரர் ஆசிஃப் ஷேக்கும் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நேபாள் அணி 26 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த குஷால் மல்லா மற்றும் தீபேந்திர சிங் ஐரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின்னர் 27 ரன்களில் குசால் மல்லா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குல்சன் ஜாவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த தீபேந்திர சிங் ஐரியும் 25 ரன்களுக்கு அவுட்டானதால் நேபாள் அணியின் தோல்வியும் உறுதியானது. 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, நேபாள் அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தன்ஸிம் ஹசன் 4 விக்கெட்டுகளையும், முஸ்தஃபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வங்கதேச அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை