அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் குசால் மெண்டிஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 4 ரன்களோடு நடையைக் கட்டினர். அதேசமயம் மாறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா பவுண்டரிகளை விளாச, அவருக்கு துணையாக தனஞ்செயா டி சில்வாவும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்காவும் ஓரளவு தக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் சரித் அசலங்கா 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 21 ரன்கள் எடுத்திருந்த தனஞ்செயா டி சில்வாவும் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசரங்காவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார். அதன்பின் அணியின் கடைசி நம்பிக்கையா பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் - தசுன் ஷனகா ஜோடியில் தசுன் 3 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். 

அடுத்து களமிறங்கிய மஹீஷ் தீக்‌ஷனாவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அணியின் இறுதி நம்பிக்கையான ஏஞ்சலோ மேத்யூஸும் 16 ரன்களோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 125 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அந்த அணியின் தொடக்க வீரர்கள் தன்ஸின் ஹசன் 3 ரன்களிலும், சௌமீயா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் வங்கதேச அணி 28 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், சரிவிலிருந்து மீட்கும் முயற்சியிலும் இறங்கினர். 

ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி 40 ரன்களை எடுத்திருந்த தாவ்ஹித் ஹிரிடோய் அடுத்த பந்திலேயும், மறுபக்கம் நங்கூரம் போல் நின்று 36 ரன்களைச் சேர்த்திருந்த லிட்டன் தாஸ் விக்கெட்டையும் வநிந்து ஹசரங்கா தனது அடுத்தடுத்த ஓவர்களில் கைப்பற்றி அசத்தினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசனும் 8 ரன்களோடு நடையைக் கட்டினார். 

Advertisement

இதனால் வங்கதேச அணி வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. இலங்கை அணி தரப்பில் 18ஆவது ஓவரை வீசிய நுவான் துஷாரா அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே கொடுத்ததுடன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். ஆனால் அடுத்த ஓவரை வீசவந்த தசுன் ஷனகா முதல் பந்திலேயே புல்டாஸ் பந்தை வீசியதுடன், சிக்ஸர் கொடுத்து இலங்கை அணியின் தோல்விக்கு வழிவகுத்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மஹ்முதுல்லா 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் வங்கதேச அணியானது 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி தங்களது முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News