ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் விராட் கோலி அடித்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசி மிரட்டினார். இதனையடுத்து இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை கேசவ் மஹாராஜ் வீச அந்த ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
அதன்பின் ஓவரின் நான்காவது பந்தில் ரோஹித் சர்மா ஸ்வீப் ஷாட்டின் மூலம் டீப் ஸ்கொயர் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்ய, அந்த இடத்தில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஹென்ரிச் கிளாசென் அபாரமான டைவ் அடித்ததுடன் கேட்ச் பிடித்தும் அசத்தினார். இதனால் இன்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே குயின்டன் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து கேஷவ் மஹாராஜ் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி இரண்டாவது ஓவரின் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் சிறப்பான பந்துவீச்சின் மூலம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கேசவ் மஹாராஜின் பந்துவீச்சு குறித்த காணொளி வைரலாகி வருகிறது.