T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!

Updated: Mon, Jun 10 2024 01:17 IST
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது நடைபெறவுள்ளது. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் நடைபெற்ற இப்போட்டியின் டாஸ் நிகழ்வில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 19 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இணைந்த அக்ஸர் படேல் - ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்கள் எடுத்திருந்த அக்ஸர் படேல் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலும், ஷிவம் தூபே 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 7 ரன்கள், ரவீந்திர் ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, இறுதியில் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டாகினார். இதன்மூலம் இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டை ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கான் மற்றும் ஃபகர் ஸமான் ஆகியோரும் தலா 13 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து முகமது ரிஸ்வானுடன் இணைந்த இமாத் வசீம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். 

அதனைத்தொடர்ந்து இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷதாப் கானும் 4 ரன்களோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் 19ஆவது ஓவரை வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த இமாத் வசீம் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் இலக்க எட்டமுடியாததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை