இங்கிலாந்து அணி தங்களுடைய முடிவை நெருங்கிவிட்டது - மைக்கேல் வாகன்!

Updated: Tue, Jun 11 2024 20:47 IST
இங்கிலாந்து அணி தங்களுடைய முடிவை நெருங்கிவிட்டது - மைக்கேல் வாகன்! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும், பரபரப்பும் அதிகரித்துள்ளது. 

அந்தவகையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கிய ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இம்முறை சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. ஏனெனில் நடப்பு சீசனில் அந்த அணி விளையாடிய முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியுள்ளது. 

இதன் காரணமாக அந்த அணி எஞ்சியுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்வதுடன், அதிக ரன் ரேட் விகிதத்திலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்து அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சோபிக்காமல் தவறிவருவது ரசிகர்களையும் ஏமாற்றமடைய செய்துள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏறத்தாழ தங்களுடைய முடிவை நெருங்கிவிட்டதாக அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 2019 இல் இங்கிலாந்து அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முதல் முறையாக வென்று அசத்தியது. அப்போது அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் இங்கிலாந்து அணியை இரும்புக்கரம் கொண்டு வழிநடத்தி வந்தார். 

அவரது கேப்டன்சியின் கீழ் வீரர்கள் தங்களுடைய இடத்தை அறிந்திருந்தனர் மற்றும் அவரைக் கடப்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து உலகின் சிறந்த வெள்ளை பந்து அணியாக இருந்தது, மற்ற அணிகள் அனைவரும் இங்கிலாந்தை நகலெடுக்க முயன்றனர். ஆனால் தற்போது மற்ற அணிகள் தங்களுடைய ஆட்டத்தில் அதிக திறனையும், ஒழுக்கத்தையும் கொண்டு வந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியானது அதே இடத்தில் அமர்ந்துவிட்டது. 

இதனால் இங்கிலாந்து அணி மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். என்னைக்கேட்டல் தற்போதுள்ள இங்கிலாந்து அணி முடிவுக்கு வந்திவிட்டதாக நான் நினைக்கிறேன். இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நிச்சயம் இங்கிலாந்து அணி பல மாற்றங்களைச் சந்திக்கும். இந்த குழப்பத்தில் இங்கிலாந்து இருப்பது குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

ஏனெனில் இங்கிலாந்து அணி சமீப காலங்களாகவே சரிவை சந்தித்து வரும் நிலையில், அணியின் தேர்வு மற்றும் உக்திகளில் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வருகிறது. வெளியில் இருந்து பார்த்தால், இங்கிலாந்து வீரர்கள் மிகவும் அதிரடியாக விளையாடக்கூடியவர்கள் போல் தோன்றுகிறது. அணியின் அமைப்பு சிறப்பாக தோன்றினாலும், உலகக்கோப்பை போன்ற தொடரில் இது வேலைக்காகாது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை