அபாரமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவன் டெய்லர் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியானது பலப்பரீட்சை நடத்தியது. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் சிக்ஸர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கிய முகமது ரிஸ்வான் 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கானும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமானும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.
ஆனால் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்த ஃபகர் ஸமானும் 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணியானது 26 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேப்டன் பாபர் ஆசமுடன் இணைந்த ஷதாப் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்த நிறுத்தினார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணியானது பவர்பிளே முடிவில் 30 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் அமெரிக்க அணி வீரர் ஸ்டீவன் டெய்லர் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி சௌரப் நேத்ரவால்கர் வீசிய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தை முகமது ரிஸ்வான் எதிர்கொள்ள, அது அவரது பேட்டில் எட்ஜ் எடுத்து ஸ்லிப்பை நோக்கி சென்றது. அப்போது அத்திசையில் இருந்த ஸ்டீவன் டெய்லர் டைவ் அடித்ததுடன் ஒற்றைக் கையில் கேட்சை பிடித்து அசத்தினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.