அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

Advertisement

பின்னர் இணைந்த ரிஷப் பந்த் மற்றும் ஷிவம் தூபே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் மீண்டும் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை தாரை வார்த்தார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஒரு பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் தொடர்ந்து தடுமாறி வந்த ஷிவம் தூபே 3 சிக்ஸர்களை அடித்திருந்தாலும் 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தன்ஸிம் ஹசன் ஷாகிப் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 197 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் லிட்டன் தாஸ் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் தன்ஸித் ஹசனும் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோய் 4 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 11 ரன்களுக்கும் என அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜக்கார் அலியும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழக்க வங்கதேச அணி 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து மஹ்முதுல்லாவுடன் இணைந்த ரிஷாத் ஹொசைன் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை விளாசிய நிலையில், 24 ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் இறுதியில் மஹ்முதுல்லா 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்று வாய்ப்பையும் உறுதிசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News