T20 WC 2024: இலங்கையை 124 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் குசால் மெண்டிஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 4 ரன்களோடு நடையைக் கட்டினர். அதேசமயம் மாறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா பவுண்டரிகளை விளாச, அவருக்கு துணையாக தனஞ்செயா டி சில்வாவும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்காவும் ஓரளவு தக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் சரித் அசலங்கா 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 21 ரன்கள் எடுத்திருந்த தனஞ்செயா டி சில்வாவும் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசரங்காவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார். அதன்பின் அணியின் கடைசி நம்பிக்கையா பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் - தசுன் ஷனகா ஜோடியில் தசுன் 3 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய மஹீஷ் தீக்ஷனாவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அணியின் இறுதி நம்பிக்கையான ஏஞ்சலோ மேத்யூஸும் 16 ரன்களோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 125 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடவுள்ளது.