T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-கனடா போட்டி!

Updated: Sat, Jun 15 2024 21:21 IST
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-கனடா போட்டி! (Image Source: Google)

 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் ஏறத்தாழ எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் இந்திய அணியானது கனடா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.  இதில் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கனடா அணியானது அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்திருந்தது. 

மேற்கொண்டு குரூஏ ஏ பிரிவிலிருந்து மற்றொரு அணியாக அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய காரணத்தால், இப்போட்டியின் வெற்றி தோல்வி முடிவானது பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததாக பார்க்கப்பட்டது. அதேசமயம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி தயாராவதற்கான பயிற்சி போட்டியாகவே இப்போட்டியை ரசிகர்கள் பார்த்தனர். 

அதன்படி ஃபுளோரிடாவில் நடைபெற இருந்த இந்த போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தாமதமானது. ஏறத்தாழ குறிப்பிட்ட கால நேரத்தை தாண்டிய நிலையிலும் மைதானம் விளையாட தயார் செய்யப்படாததால், இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இப்போட்டியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணியானது தங்கள் முதல் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த சூப்பர் 8 சுற்று ஆட்டமானது பார்பாடாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை